தனிமையாக செயல்படுவதற்கு உண்டாக்கப் படவில்லை

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

January 3, 2014

[English Translation]

சில நாட்களுக்கு முன்பு என் தங்கையோடு நடந்து கொண்டிருந்தேன். சுவாரஸ்யமாக, என்னோடு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று அவர் சிரிக்கத் துவங்கிவிட்டார். நான் காரணம் கேட்ட போது, “அண்ணா, நீங்கள் அப்பாவைப்போலவே நடக்கிறீர்கள் என்பதை எப்பொழுதாவது கவணித்ததுண்டா?” என்று கேட்டார். என் தந்தையைப் போலவே கைகளை பின்னால் கட்டியவாறு என் தந்தையை போலவே நான் நடந்து கொண்டிருந்தது எனக்கு இனிமையான ஆச்சரியமாக இருந்தது.

Not made to do it alone

என் தந்தை கேரளத்தில் வளர்க்கப்பட்டு தன் படிப்பை ஒரிசாவில் முடித்தார். பின் பெங்களூரில் 25 வருடங்களுக்கு முன்பாக வேலையில் அமர்த்தப்பட்டார். ஆனால், நான் என் எல்லா நாட்களையும் பெங்களூரில் தான் கழித்தேன். புதியவைகளைக் கற்றுகொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதால், எனக்கு நல்லதாகத் தெரிந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். சைகைகளிலிருந்து உடல் மொழி வரை, புதிய பாணிகளை கற்றுக்கொள்ள எனக்கு மிகுந்த பிரியம் உண்டு. ஒரு நகரத்தில் வளர்க்கப்படிருந்தாலும், வித்தியாசமான கலாசாரம், சுய முன்னேற்றத்திற்கு நான் எடுத்த முயற்சிகள், எல்லாவற்றையும் கடந்து, நான் ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்கப்படுள்ளேன் மற்றும் அது என்னில் எப்படியாவது வெளிப்படும் என்பது மாற்றமுடியாத உண்மையாகும். அது எனக்குள் எப்பொழுதும் இருக்கிறது.

மனித சுபாவத்தை நீங்கள் உற்று கவனித்தீர்களானால், பாவத்தின் விளைவுகளால் இருக்கும் தன்மைகள் அதிகமாக உள்ளதைக் காணலாம். ஆனால் உண்மை என்னவென்றால், தேவனுடைய சாயலில் நாம் உருவாக்கப் பட்டிருக்கிற படியினால், தேவனை பிரதிபலிக்கவே நாம் உருவாக்கப் பட்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் பரலோக தகப்பனைப் போல் இருக்கவேண்டும்.

நீங்கள் தேவனைக் குறித்து சற்று ஆய்வு செய்வீர்களானால், பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியானார் ஆகிய மூவரும் முற்றிலும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். எல்லா நேரங்களிலும், அவர்கள் செயல்படும்போது தனித் தனி தன்மைகளையுடைய ஆனால் ஒருங்கிணைந்தவர்களாக இருக்கும் படியாக பிணைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆதியாகமத்தில் “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்று கூறுகிறார். இதில் இருந்து அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறார்கள் என்பதை நீங்கள் காணலாம். யோவான் 10:30 இல் இயேசு சொல்கிறார், நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்”. யோவான் 5: 19 இல் “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்;” என்று சொல்கிறார்.

பின்பும் இயேசு, யோவான் 15:5 இல் “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” என்று சொல்கிறார். யோவான் 14:16 இல் “நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” என்று கூறுகிறார். 17ஆம் வசனத்தில் இந்த தேற்றரவாளன் பரிசுத்த ஆவியானவர் என்று அறிந்து கொள்கிறோம்.

என் நண்பர்களே, நீங்கள் தேவனுடைய சாயலில் உண்டாக்கப் பட்டிருக்கிறீர்களானால், பரிசுத்த ஆவியானவரை முழுமையாக சார்ந்து வாழும்படியாகவே உருவாக்கப் பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்கையை நம்மால் வாழ முடியாது. நீங்கள் தனியாக செயல்படும்படி உருவாக்கப் படவில்லை. நம் தேற்றரவாளனான பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், துதிப்பதற்கும், ஜெபிப்பதற்கும், வேதம் வாசிப்பதற்கும், பரிசுத்தமாக இருப்பதற்கும், தேவனை தேடுவதற்கும் நாம் எடுக்கும் எந்த முயற்சிகளிலும் வெற்றி பெற முடியாது. நான் இந்த வலைப் பதிவை எழுத ஆரம்பிக்கும் போது, இதை முக்கியமாக வாலிபர்களுக்காகவும் தேவனோடு நடப்பதற்கு போராடுபவர்களுக்காகவும் எழுதும் படி பரிசுத்த ஆவியானவர் என்னை நடத்துவதை என்னால் உணரமுடிந்தது.

பிதா என்ன கூறினாரோ அதையே இயேசு சொல்லவும் நிறைவேற்றவும் செய்தார். இயேசு பிதாவை சார்ந்திருந்தார். நம் சுய நீதியில் வாழ்வதற்கு போராடுவதை விடுத்து, சுயத்திற்கு செத்தவர்களாகவும் பரிசுத்த ஆவியானவர் காண்பிக்கும் வழியில் வாழும்படியாக அவரை சார்ந்து வாழ்பவர்களாகவும் நாம் இருக்கவேண்டும்.

இந்த சத்தியம் இப்பொழுது நமக்கு வெளிப்படுத்தப் பட்டிருப்பதால், இதன் படி வாழ நாம் என்னென்ன செய்ய வேண்டுமோ அவைகளை செய்யலாம்! அதனால், நடைமுறையில் வேதத்தை வாசிக்க ஆரம்பிக்கும் போதும், ஜெபிக்கும் போதும், ஊழியம் செய்யும்போதும், பாவம் செய்ய தூண்டப் படும்போதும், பரிசுத்த ஆவியானவரைப் பிடித்துக் கொள்வேன். இவைகள் எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருப்பதே முக்கியமாகும். அவருடைய கரங்களில் நம்மை முழுமையாக ஒப்படைக்கும்போடுதான் அவர் பூமியில் நம்மை சிருஷ்டித்ததின் சித்தம் நிறைவேறும் படியாக நாம் உருவாக்கப் படமுடியும்.

ஆசிர்வாதங்கள்,

ஷைஜு