[English Translation] மலேசியாவில் உள்ள பெனாங்கில் ஒரு அருமையான இரவு ஜெபக்கூட்டத்தில் கலந்து கொண்டோம். திரளான ஜனங்கள் இரட்சிக்கப்படுவதையும், சுகம் பெற்றுக்கொள்வதையும் காணும்படியாக தேவன் எனக்கு அனுக்கிரகம் செய்தார். கூட்டம் முடிந்தவுடன் இரவு உணவிற்கு சென்றோம்.
நான் தங்கியிருந்த விடுதியை சென்றடைவதற்கு இரவு ஒன்றரை மணி ஆகி விட்டிருந்தது. நான் மிகவும் சோர்வாக இருந்ததால், அடுத்த நாள் ஆலயத்திற்கு செல்வதற்கு எட்டு மணிக்கு எழ வேண்டும் என்று நியாபகம் வந்த போது மிகவும் சோர்வாக உணர்ந்தேன். அன்று மிகவும் தாமதமாகி இருந்த போதிலும், தேவனைத் தேட வேண்டும் என்று வாஞ்சித்தேன்.
சிறிது நேரத்தை ஜெபத்தில் செலவழித்துவிட்டு, “தேவனே, நான் ஜெபிக்க வேண்டும் என்று நீர் விரும்புவீரானால், என்னை காலையில் சீக்கிரம் எழுப்பி விடும்” என்று தேவனிடம் கூறி படுக்கைக்கு சென்றேன். சீக்கிரம் தூங்கச் செல்வதற்கு அதை ஒரு காரணமாக எண்ணினேனோ? பின் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்று விட்டேன். காலை மூன்று மணியளவில் யாரோ என்னை எழுப்பி விட்டது போல் உணர்ந்து எழுந்து கொண்டேன். ஆனாலும் இன்னும் சிறிது நேரம் தூங்க வேண்டும் என்று மனதாயிருந்தேன். பின்னர் நான்கு மணியளவில் மறுபடியும் எழுப்பி விடப்பட்டேன். ஆனாலும் எழுந்து கொள்ள முடியாமல் தூங்கி விட்டேன். அப்பொழுது ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் என் தாயார் “தயவு செய்து என் மகனே” என்று கூறினார். அதைக் கண்டவுடனே எழுந்து கொண்டேன். எழுந்தவுடன் தான் அது என் தாயார் அல்ல தேவன் தான் என் ஜெபத்தைக் கேட்க வேண்டும் என்று என்னை எழுப்பி இருக்கிறார் என்று உணர்ந்து கொண்டேன்.
அந்த நொடியில் எத்தனை முறை தேவனை காக்க வைத்திருக்கிறேன் என்று உணர்ந்தேன். ஆழ் கடலில் பேதுரு செல்லும் போது கரையில் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்த இயேசு என் நியாபகத்திற்கு வந்தார். என் கனவில் வந்ததைப் போலவே, தேவன் எப்பொழுதும் மென்மையாகவே இருப்பார். ஒரு போதும் அவர் தான் விரும்புவதை நம் மேல் திணிக்க முயல்வதில்லை. நான் அந்த நேரத்தில் எழுந்து கொண்டிருக்க வில்லை என்றால் அவர் என்னை உறங்க விட்டிருப்பார் என்பது உறுதி. பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? என்று அவர் மத் 26:40 இல் அவர் தன் சீஷர்களிடம் வேண்டிக்கொள்வது எனக்கு நியாபகம் வந்தது.
நீங்களும் தேவனைக் காக்க வைத்திருக்கிறீர்கள? ஆவியானவர், மென்மையான அசைவிலும், மென்மையான உந்துதலிலும் தான் வலிமையான வீரர்களை உருவாக்குகிறார். இந்தத் தலைமுறையினர் ஆவியானவரின் மென்மையான சத்தத்தை கவனிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மோசே எரிந்து கொண்டிருந்த முட்செடியை பார்க்கும் படியாக வந்ததினால் தான் தேவன் அவரோடு இடைப்பட்டார். (யாத் 3:4)
யாக் 4: 8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் என்று சொல்கிறது. மேலும் இந்த வேத பகுதி, பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள் என்று தொடர்கிறது. ஜெபத்தில் நேரம் செலவழிப்பதில் நாம் இருமனமுள்ளவர்களாக இருக்கிறோமா? இந்த வலைப்பதிவு உங்களுக்காக எழுதப்பட்டதைப் போல் இருக்கிறதா? நீங்கள் தேவனைக் காக்க வைக்கிறீர்களா? நண்பரே, உங்கள் சிருஷ்டிகரான தேவனுடன் நடப்பதே நீங்கள் உங்கள் வாழ்வில் செய்யும் முக்கியமான காரியமாக இருக்க முடியும். நீங்கள் இதில் முதல் அடி எடுப்பதைக் காண காத்துக் கொண்டிருக்கிறார். இன்றே துவங்குங்கள்! இப்பொழுதே துவங்குங்கள்.