ஆத்தும பிணைப்புகளில் உள்ள ஆபத்துகள் – வெல்லுங்கள்!

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

June 15, 2013

[English Translation] [French Translation] [Spanish Translation]

ஆரோக்கியமற்ற ஆத்தும பிணைப்புகளை சரியாக கவனிக்காவிட்டால் அவை கட்டுகளாக மாறிவிடும். ஒரு முறை நான் வேறு ஒரு நாட்டிற்க்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது என் அருகில் இருந்த ஒரு வாலிபர் என் மடிக் கணினியைக் குறித்து என்னோடு பேச ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் தன் வாழ்க்கையை பற்றி என்னோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

soul-ties

நான் ஒரு சுவிசேஷகன் என்று அறிந்ததுமே தன்னைப்பற்றி மேலும் கூறினார். அவர், தான் நேசிக்கும் பெண்ணைப்பற்றி தான் எப்பொழுதும் நினைதுக்கொண்டிருப்பதாகவும்.

இரவில் உறக்கத்தின் நடுவில் அவரைப்பற்றி நினைத்து எழுந்துகொள்வதாகவும், அப்படி எழுந்து இணையதில் அவர் ஆன்லைனில் செல்லும் பொழுது அந்தப்பெண்ணும் ஆன்லைனில் அவருக்காக காத்திருப்பார் என்றும் சொன்னார். அந்தப்பெண்ணைப்பற்றி சதா சிந்தித்துக்கொண்டிருப்பதாகவும் அது தன் படிப்பை பாதிப்பதாகவும் என்னோடு சொன்னார்.

மேலும் அவர், இப்படி நிகழ்வது அவர்கள் ஆத்தும துணையாளர்களாக இருப்பதனால் தான் என்று கருதுவதாக சொன்னார். அந்தப்பெண் அவரை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டதாகவும், அவர் என்னை விமானத்தில் சந்தித்தபோது மிகவும் நெருக்கப்படுவது போல் உணர்வதாகவும் கூறினார். நாங்கள் மேலும் உரையாடி அதன் காரணம் என்னவென்று ஆராய்ந்ததில் அவர் அந்தப் பெண்ணின் ஆத்மாவோடு பிணைக்கப்பட்டிருப்பதே என்று அறிந்தோம். அவருக்கு சில ஆலோசனைகள் கூறும்படியாக கர்த்தர் எனக்கு உதவினார்.

ஆத்தும பிணைப்பு என்பது என்ன?

ஆத்தும பிணைப்பு இன்று விசுவாசிகள் மத்தியிலும் காணப்படுகிறது. ஆத்தும பிணைப்பு என்பது இரண்டு அல்லது அதற்க்கும் அதிகமான மனிதர்களுக்கிடையில் ஏற்படும் ஆரோக்கியமற்ற பந்தமாகும். அது அவர்களை அடிமைப்படுத்தி, கட்டுப்படுத்தி, சிலசமயம் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் படியாகவும் செய்யும். தேவனின் பிள்ளைகளாக இருக்கும் நாம் மாம்சத்தினாலோ, ஆத்துமாவினாலோ ஆளப்படும்படி இடம் கொடுக்காமல் தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படும்படி இடம் கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட காரியங்கள் நம்மை ஸ்திரமற்றவர்களாக மாற்றி நம்மை கர்த்தரை விட்டு பின்வாங்க செய்யும் வல்லமைகளாக மாறுகின்றன. கர்த்தர் நாம் இப்படிப்பட்ட பிணைப்புகளிலிருந்து  விடுதலை ஆக வேண்டும் என்று விரும்புகிறார். இப்படிபட்டவைகளில் நாம் விழுவதற்கு சில அற்ப மணித்துளியில் நடக்கும் காரியங்களே காரணமாகின்றன. இவைகள் கர்த்தர் நமக்கு வைத்திருக்கும் மேலான ஆசிர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ளாமல் போவதற்கு முக்கியமான காரணிகளாக மாறிவிடுகின்றன. இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருந்தால் கர்த்தர் உங்களை இப்படிப்பட்ட காரியங்களிலிருந்து விடுதலையாக்கி, அவர் உங்களுக்கு வைத்திருக்கும் மேலான வாழ்க்கைக்கு நடத்தும் படியாக விரும்புகிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்.

உறவுகளில் இருக்கும் ஆத்தும பிணைப்புகள்

இப்படிப்பட்ட பிணைப்புகள் கர்த்தரின் சித்தத்திற்கு வெளியில் ஏற்படும் உறவுகளில் இருப்பதை நீங்கள் காணலாம். ஆத்தும பிணைப்பில் உள்ளவர்கள், அவர்கள் எவர்களோடு பிணைக்கப் பட்டிருகிறார்களோ, அவர்களுக்கே தன்னுடைய எல்லா பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து அவர்களை மகிழப்பண்ண மனதாயிருப்பார்கள். திருமண பந்தத்தின் வெளியே உள்ள ஆத்தும பிணைப்பில் இருப்பவர்கள் “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது, நீ இல்லாமல் என்னால் சந்தோஷமாக இருக்க முடியாது, நீ இல்லையென்றால் நான் இறந்து விடுவேன்” என்று பலவாறாக சொல்லக் கேட்கலாம். இவ்வாறான உறவுகள் ஆவியின் அன்பு, சமாதானம், மற்றும் சந்தோஷத்தின் அடிப்படையில் உருவானவை அல்ல. இந்த பிணைப்புகள் ஆத்தும பந்தத்தை தாண்டி மாம்ச உறவுகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சில சமயம், இவை ஒரே பாலினருக்குளேயும் நடப்பதுண்டு.

தங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அளவிற்கு சிலர் இவைகளில் சிக்கி கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மற்றவரைப்பற்றி அதிகமாக கவலைப்பட்டு இவர்கள் சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் தங்கள் ஆரோக்யத்தை கெடுத்துக்கொள்கிறார்கள். மேலும் சிலரோ, மற்றவர் தங்களை விட்டு சிறிது விலகுவது போல் உணர்ந்தாலும் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். உண்மையான அன்பின் உறவு, அந்த நபரையும் தாண்டி கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்ட உறவாகும்.

கணவன் மனைவிக்கு இடையில் உருவாகும் ஆத்துமா பிணைப்பு

அதீத அன்பு கணவன் மனைவிக்கு இடையில் இருந்தாலும், அது ஆவியின் அன்பாக இருக்க வேண்டுமே தவிர ஆத்துமாவினால் ஆளப்படுவதாக இருக்கக் கூடாது (கொலோ 1:8). ஆத்தும மண்டலத்தில் ஏற்படும் அன்பு, திருமண பந்தத்திற்குள் இருந்தாலும் நாளடைவில் கட்டுப்படுத்தும் ஆவியாக மாறிவிடும். இப்படிப்பட்ட உறவுகளில், மற்றையவர் கட்டுப்படுத்துபவராகவும் நீங்கள் கட்டுப்படுபவராகவும் மாறிவிடுவீர்கள். மற்றவரை கட்டுப்படுத்தும் மற்றும் பாதிக்கும் ஆவி கர்த்தரிடத்திலிருந்து வருவதல்ல.

பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மத்தியில் உண்டாகும் ஆத்தும பிணைப்பு

சில சமயம் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்குள்ள உறவில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அளவிற்கு அதிகமாக நேசிப்பதால் பிறர் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதைக் கூட விரும்ப மாட்டார்கள். இப்படிப்பட்ட அளவிற்கு அதிகமான அன்பு, உங்கள் பிள்ளைகளை ஒழுக்கமானவர்களாக வளரச் செய்யாமல், அவர்களை வழி தவறிப் போகச் செய்துவிடும். சில சூழ்நிலைகளில் தன் வாழ்கைத்துணையை விட பிள்ளைகளை முக்கியமானவர்களாக கருதச்செய்துவிடுவதுமுண்டு. இது உங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி விடும். வளர்ந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோரை விட்டு திருமணமாகிச் செல்ல மறுப்பதும், விதவையான பெற்றோரை பராமரிக்கும்படியாக திருமணம் செய்யாமல் அவரோடே இருக்கும்படியாக நினைப்பதும் ஆத்தும பிணைப்பாகும். இது தங்களின் பொறுப்புகளைக் குறித்து தவறாகப் புரிந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

ஐக்கியதினால் உண்டாகும் ஆத்தும பிணைப்பு

உங்கள் சிநேகிதர்கள் யார் என்பதைக் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பிறரோடு உள்ள ஐக்கியம் உங்கள் அபிஷேகத்தைக் குறைக்க வல்லதாக இருப்பது போல் அவர்களுடைய மாறுபாடான குணாதிசயங்களை உங்களுக்குள் விதைக்க வல்லதாகவும் இருக்கிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்கள் தேவனை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். தேவனால் உண்டான சில ஐக்கியங்களை வேதத்தில் நாம் காணலாம். தாவீது-யோனத்தான், எலியா-எலிசா, இவர்கள் நடுவில் இருந்த உறவு தேவனால் உண்டானதாக இருந்தது.

நம் ஐக்கியத்தில் தேவனைப் பற்றிய பயம் குறைந்து போகும்போது அவை நட்பையும் தாண்டிச் செல்ல ஆரம்பிக்கும். திருமணதிற்கு வெளியே ஏற்படும் உறவுகளினால் பல குடும்பங்கள் சிதைக்கப்படிருக்கின்றன. ஆவிக்குரிய ஆலோசனைகளில் ஆரம்பிக்கும் சில உறவுகள் கூட கவனக்குறைவாக இருக்கும்போது ஆரோக்கியமற்ற உறவுகளாக மாறி விடுவதுண்டு. இவை பொய்யான ஆனால் இனிமையாக இருக்கும் புகழ்ச்சியில் இவை ஆரம்பித்து, முட்டாள்தனமாக உண்மையை விட்டு விலகச் செய்து, தேவனுக்குள் இல்லாத உறவுக்கு ஆசைப்பட செய்து, அவர்கள் சுதாரிக்கும் முன்பே அவர்களை தேவனற்ற ஆத்தும பிணைப்பில் ஆழ்த்தி உடைக்கப்பட்ட குடும்பங்களில் மற்றும் உடைக்கப்பட்ட இதயங்களில் சென்று முடிந்துவிடும்.

ஒரு முறை ஒரு பாஸ்டர் எதிர் பாலினரோடு தனியே சேர்ந்து ஜெபிக்கும் போது நாம் சந்திக்கும் ஆபத்துக்களை குறித்து எனக்கு ஆலோசனை கொடுத்தார். ஜெபம் மற்றவரின் ஆத்துமாவோடு நம்மைப் இணைக்கும் ஒரு வழியாகும். நம் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டு, ஆலோசனை கேட்கும்போது, அது மிகவும் கடினமான ஆத்தும பிணைப்பை உருவாக்கிவிட வாய்ப்புகள் அதிகம். இது சீக்கிரமாக உணர்வுகள் சம்பந்தப்பட்ட உறவாக மாறிவிடலாம்.

மிருகங்களோடு அளவற்ற உறவு

மிருகங்கள் மேல் உள்ள அன்பென்று உலகம் இதை கூறினாலும், சில சமயங்களில் இந்த அன்பு அளவு கடந்து செல்லவதை சிலரால் தடுக்கமுடிவதில்லை. இதன் ஒரு அறிகுறி, தன் செல்லப் பிராணியிடம் அளவு கடந்த பிரியம் வைத்திருப்பதாகும். நாளடைவில் அவர் மனிதர்களோடு செலவளிக்கும் நேரத்தை விட தன் செல்லப் பிராணியுடன் செலவளிக்கும் நேரம் அதிகரிக்கும்.

கற்பனை உலகம்

நீங்கள் சம்பந்தப்படாத ஒரு நபருடனும் ஆத்தும பிணைப்பு உண்டாகலாம். புகழ் பெற்ற நபர்களின் மீது அசாதாரணமான அன்பு கொள்வதின் மூலம் உங்கள் வாழ்வில் நீங்கள் கட்டுகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. இது உங்கள் வாழ்வில் ஒரு தேவனை விட்டு விலகி ஒரு விக்கிரகத்தை வழிபடுபவராக உங்களை மாற்றிவிடும். நீங்கள் அறியாமல் இது துவங்குவதனால், நீங்கள் கவனமாயிராவிட்டால் எதிரிக்கு ஒரு வாசலை நீங்கள் திறக்க இது வழி செய்துவிடும்.

ஒரு குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகை மேல் மோகம் கொண்டு அவர்களோடு தானாக உருவாக்கிய கற்பனை உலகத்தில் அவர்களை தங்கள் விக்கிரகமாகக் கொண்டு சிலர் வாழ்கிறார்கள். அவர்களுடைய படங்களையும், அவர்களைப் பற்றிய பத்திரிக்கைகளையும் சேகரித்து வைத்திருப்பார்கள். நாளடைவில் இவர்கள் உண்மையான உலகத்தை மறந்து தங்கள் விக்கிரகங்களோடு கற்பனை உலகத்தில் லயித்திருப்பர்கள். இது உடைக்கப்படாவிட்டால் அவர்களுடைய திருமண வாழ்கையை கூட இது பாதிக்கக்கூடும். கர்த்தரை மட்டுமே நாம் நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பெலனோடும் நேசிக்க வேண்டும். (மார்க்கு 12:30)

ஆத்தும பிணைப்புகளை உடைப்பது எப்படி

நீங்கள் உலகத்தோடு ஆத்தும பிணைப்பில் இருக்கும் போது, மற்றவர் கூறுவதை கேட்க மனதில்லாமல் இருப்பீர்கள். இது அவர்கள் உங்களை ஆளுகை செய்வதற்கு தன்னை ஒப்புக்கொடுக்க வைத்துவிடும், பின்னர் இது கர்த்தரின் இடத்தை உங்கள் வாழ்வில் எடுத்துக்கொள்ளும்.

அதனால் நீங்கள் எங்கு எதிரி நுழைய உங்கள் வாழ்வில் வாசலை திறந்தீர்கள் என்று ஆராய்ந்து அறிவது முக்கியமாகும்.

இயேசுவிடம் உங்கள் வாழ்வையும் ஆத்துமாவையும் ஆளும்படியாக ஒப்புக்கொடுங்கள். நீங்கள் ஏதாகிலும் வார்த்தைகளினாலோ செயல்களினாலோ ஒப்பந்தம் செய்திருப்பீர்களானால் அவற்றை ஜெபத்தில் முறியடியுங்கள்.

நீங்கள் உங்கள் ஆத்தும பிணைப்புகளை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து, கிறிஸ்துவின் இரத்தம் உங்கள் பாவங்களை கழுவும்படியாக ஒப்புக்கொடுங்கள். பயத்தை உருவாக்கும் வாசல்களை தேவனின் வார்த்தைகளால் அடைத்து, தேவனின் வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது தேவனுக்கடுத்த சிந்தையால் உங்கள் இதயத்தை நிரப்புங்கள். உங்கள் கடந்த காலத்தை உங்களுக்கு நினைவுபடுத்தும் எல்லாக்காரியங்களையும் உங்களை விட்டு நீக்குங்கள்.

பரிசுத்த ஆவியானவரோடு இசைந்து, தேவ பிரசன்னத்தில் நடங்கள். இவைகளிலிருந்து நீங்கள் முற்றிலும் விடுதலை பெறாவிட்டால் ஒரு அபிஷேகம் பண்ணப்பட்ட சபை தலைவரின் ஒத்தாசையை நாடுங்கள். உங்கள் சபை மூப்பர்களோடு உங்கள் பிரச்சினையை பகிர்ந்து கொண்டு அவர்களின் உதவியை பெற முயலுங்கள்.

நீங்கள் இதை ஒரு வழிகாட்டி ஜெபமாக ஏறெடுக்கலாம்: தந்தையே, நீர் என்னை நேசிக்கிறீர் என்று நான் அறிவேன். என்னை பாதிக்கும்படி நான் வளர்த்துக்கொண்ட (அந்த நபரின் பெயரை சொல்லவும்) ______ எல்லா ஆத்தும பிணைப்புகளினிமித்தம் என்னை மன்னியும். நான் என்னை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். உம்முடைய கர்த்தத்துவத்தை என் வாழ்கையில் ஸ்தாபிக்கும்படியாக உம்மை வேண்டிக்கொள்கிறேன். பிறர் என்னை ஆளுகை செய்யும்படியாக நான் கொடுத்த எல்லா அதிகாரங்களையும் இயேசுவின் நாமத்தில் முறியடித்து என்னை விடுதலை செய்கிறேன். ஆமென்.

நீங்கள் இந்த பட்டியலில் எதையாவது கூட்ட விரும்புகிறீர்களா? உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.