மலையுச்சி ஜெபத்திற்கான மூன்று திறவுகோல்கள்

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

November 8, 2013

[English Translation]

சில வருடங்களுக்கு முன்பு, குறைந்த கட்டணங்கள் உடைய விமான சேவைகள் இருக்கும் இந்தக் கால கட்டம் போல், விமான பயணம் அவ்வளவு மலிவாக இல்லை. கருத்தரங்குகளுக்கு செல்ல பேருந்து மற்றும் ரயில்களை தான் நான் அதிகம் பயணம் செய்வேன். சீரான பயணத்திற்காகவும், தேவனுடைய படைப்புகளை பார்க்க முடிவதினாலும், மலைகள் மற்றும் வயல்கள் வழியாக செல்லும் ரயில்களில் செல்வதற்கு தான் அதிகம் விரும்புவேன்.

mountain-top-experience (1) மலைகளைப் பார்ப்பதில் எப்பொழுதும் எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. மலைகளைப் பார்க்கும் போது, தேவனோடு மோசே எப்படி மலையுச்சியில் நின்று பேசினார் என்பதை குறித்து நான் வாசித்த கதைகளை நினைத்து பிரமிப்பேன். பல சமயங்கள், மேகங்களால் சூழப்பட்ட மலைகளை பார்க்கும்போது நானும் அங்கு செல்ல வேண்டும் என்று விரும்புவேன்.

நீங்கள் எதைக் குறித்து ஆசைப் படுகிறீர்களோ அவைகளைக் குறித்து கவனமாயிருங்கள்! என்னுடைய பத்தொன்பதாம் வயதில் இது தான் நடந்தது. கொடைக்கானலில் உள்ள கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும் படி எனக்கு அழைப்பு வந்தது. படிக்கும் போதே அக்கல்லூரியின் வினைஞராக பணியாற்றும்படியாகவும் அழைத்திருந்தார்கள். அக்கலூரி மலையுச்சியில் இருந்து சற்று கீழே அமைந்திருந்தது. கல்லூரி விடுதியில் என்னுடைய அறை ஜன்னலில் இருந்து பார்க்கும் போது அற்புதமான மலைக் காட்சி தெரியும்படியாக அமைந்திருந்தது. ஒவ்வொரு நாளும் இந்தக் காட்சியை பார்த்தபடியே என் விடுதியை சென்றடைவது என் வழக்கமாக இருந்தது. இப்போதும் அதை நினைவு கூர்ந்து மகிழ்வதுண்டு. அங்கு இருந்த மூன்று வருடங்களும் அது வரை இல்லாத அளவுக்கு அதிகமாக தேவனைத் தேட எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தன.

மலையுச்சி அனுபவம் என்ற சொற்றொடர், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளான மோசே, எலியா மற்றும் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவும் மலை உச்சிக்கு சென்று ஜெபித்ததைக் குறிக்க உபயோகப் படுத்தப் பட்ட இடங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகும். மலை உச்சி அனுபவம் என்பது ஒரு குறிப்பிட்ட மாதிரி ஜெபத்திற்கு அப்பாற்ப்பட்டதாகும். இந்த அனுபவம் பெற்ற, ஜெபிக்க உற்சாகமுள்ள இவர்களிடம் இருந்து நம் அன்றாட ஜெப வாழ்வுக்கு சில பாடங்களை கற்றுகொள்ளலாம்.

ஒரு தன்னலமற்ற அனுபவம் நம் ஜெபத்தில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய ஒரு காரியம், நாம் ஜெபிப்பதற்கான நோக்கத்தை அறிந்து கொள்வதாகும். ஒவ்வொரு முறை மோசே மலை உச்சிக்கு சென்ற போதும், அது தேவனுடைய நோக்கத்திற்காக இருந்ததே அல்லாமல் தன்னுடைய நோக்கத்திற்காக இல்லை. தேவன் இஸ்ரவேலர்களுடன் பேசும்படியாக மோசேயை மலையுச்சிக்கு அழைத்தார். ஒவ்வொரு முறை இயேசு ஜெபிக்கும்படியாகச் சென்ற போதும் அது, மனித குலத்தைக் குறித்த பிதாவின் சித்தத்தைப் பற்றியதாக இருந்தது.

மலையுச்சி அனுபவம் என்பது ஒரு தன்னலமற்ற அனுபவமாகும், ஆனால் இந்தத் தலைமுறையினர், ஜெபம் என்பது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதைப் பற்றியது என்று தவறான நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறனர். ஜெபம் என்பது, “என் சித்தம் அல்ல, உம சித்தம் ஆகக் கடவது” என்று சொல்லும் அனுபவமாகும்.

நீங்கள் மலை உச்சிக்கு செல்லும்போது, உங்கள் கூடாரத்தை, சூழ்நிலைகளை, மற்றும் வாழ்க்கையை விட்டு செல்கிறீர்கள். அங்கு செல்லும் போது, இவைகளைக் குறித்த உங்கள் கோணங்கள் மாறுகின்றன. இவைகளை நீங்கள் எப்படிப் பார்கிறீர்கள் என்பதை பற்றியல்ல, தேவன் இவைகளை எப்படிப் பார்கிறார் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். தேவ பிரசன்னத்தில் இருக்கும் போது, கீழே நீங்கள் விட்டு வந்த உங்கள் பிரச்சினைகள் மாறாமல் இருக்கலாம் ஆனால், அவைகள் எவ்வாறு மாறப்போகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

செயல்பாட்டுத் திட்டம்: செயல்பாட்டுத் திட்டம்: ஜெபத்தில் உங்களது நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள்; உங்கள் விருப்பங்களை விடுத்து தேவனுடைய விருப்பங்களுக்கு விட்டுக்கொடுப்பதின் மூலமாக உங்கள் மாம்சத்தை வெல்லுங்கள். உங்கள் உணர்வுகளில் இருந்தும், உலகத்தில் இருந்தும் இணக்கமாவதை விடுத்து, தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கு உங்களை இணைக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.

இருதயம் மற்றும் பெலன் சார்ந்த அனுபவம்

பல சமயங்களில், தேவனை நம் முழு மனதோடும், இருதயத்தோடும் நேசிப்பதில் நாம் மிகவும் கவனம் செலுத்துகிறோம், ஆனால், தேவனை நம் இருதயத்திலும் மனத்திலும் நேசிப்பதால் நாம் அவரை முழுமையாக நேசிப்பதாக ஆகாது, அவரை முழு பெலத்தோடும் நேசித்தால் மட்டுமே அவரை முழுமையாக நேசிக்க முடியும் உபா 6:5

மலையுச்சியில் கிடைத்த அனுபவத்தின் மூலமாக மலையில் ஏறுவதற்கு அதிகமான வலிமை தேவை என்பதை கற்றுக்கொண்டேன். அங்கு தங்கியிருந்த மூன்று வருடங்களில் ஒரே ஒரு முறை தான், அக்கல்லூரி முதல்வரான டாக்டர். சாம் ஆப்ரஹாம் அவர்களுடன் மலை ஏற்றத்திற்கு சென்றிருக்கிறேன். பின்னர் அவர் என்னை மலை ஏற்றத்திற்கு அழைக்கும் போதெல்லாம், அவரோடு செல்வதற்கு பதிலாக என் அறையில் இருந்தபடியே அவருக்காக ஜெபித்துக்கொண்டிருப்பேன்.

ஒரு பிரசங்கியாக, வல்லமையான ஒரு பிரசங்கத்தை முடித்து விட்டு, எல்லோருக்கும் ஜெபித்த பிறகு வெற்றிக்கு கடந்து வரும்போது எவ்வளவு சோர்வாக இருக்கும் என்பதை நன்கு அறிவேன். ஆனால் இயேசு எல்லோருக்கும் ஜெபித்து முடிக்கும் வரை காத்திருந்து, பின்னர் தனியாக ஜெபிக்கும் படியாக மலை ஏறி சென்றார். மரித்தவர்கள் சிலரை உயிர்பித்ததினால் நிச்சயம் அதிகமான மக்கள் அவரிடம் ஜெபிப்பதற்காக காத்திருந்திருப்பார்கள் என்று நம்புகிறேன் (மத் 14: 22, 23). நானும் நீங்களும் சோர்வடைவது போலத்தான் ஏசுவும் சோர்வடைந்திருப்பார் ஆனால் அவர் ஜெபத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவராக இருந்தார்.

ஏசுவைக் குறித்து என்னை மிகவும் ஆர்வமடையச் செய்வது என்னவென்றால், கெத்சமனெயில் கூட, அவருடைய மூன்று சீஷர்கள் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள், அவர்களுடைய ஆவி உற்சாகமாயிருந்தும் மாம்சம் பலவீனமாக இருப்பதனால் தான் அவர்களால் ஜெபிக்க முடியவில்லை என்பதை அறிந்திருந்தும், அவர்கள் ஜெபிக்கிரார்களா என்று பார்க்க மூன்று முறை சென்றார். (மாற்கு 14: 34 – 41) இதில் இருந்து, ஜெபத்திற்காக நம்மை நாமே அதிமுக்கியமாக ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

செயல்பாட்டுத் திட்டம்: ஜெபிக்காமல் இருப்பதற்கு என்னென்ன சாக்குப்போக்கு சொல்கிறீர்கள் என்பதை கண்டறிந்து அவற்றை மாற்றுங்கள், சமரசங்கள் இல்லாமல் ஜெபத்தில் தரித்திருப்பதற்க்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள், இந்த முறை எல்லா பெலனோடும்!

கவனம் சிதறாத அனுபவம்:

மலையேற்றம் செல்பவர்கள், அங்கு நிலவும் அமைதியின் அழகினை நான்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கவனச்சிதைவு உண்டாக்கும் கருவிகளாகிய கணினி, அலைபேசி, தொலைகாட்சி போன்ற கருவிகள் நம்முடனே இருக்கும்போது, கவனம் சிதறாத ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பது அரிதாக இருக்கிறது என்பது உண்மையாகும்.

ஆனால் அதுதான் மலையுச்சி அனுபவத்தின் அழகாகும்! தேவனிடம் இருந்து நம் கவனத்தை திருப்பும் எதில் இருந்தும் விடுபட நாம் பழக வேண்டும். அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒன்றாகும். இவைகளில் இருந்து விடுபட்டாலும், ஜெபத்தில் கவனத்தை செலுத்த நம் மனதை ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டும். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவராக மாறுவதற்கு, வழக்கமான காரியங்களில் இருந்து விடுபடுவதற்கு நம்மை பழக்கப் படுத்திக்கொள்ளவேண்டும்.

செயல்பாட்டுத் திட்டம்: உங்களுக்கு கவனச்சிதைவை உண்டாக்குபவை என்னென்ன என்பதைக் கண்டறிந்து, உங்கள் ஜெப நேரங்களை முக்கியப்படுத்துங்கள். முழு மனதோடும் ஜெபத்தில் கவனம் செலுத்துங்கள்.

எளிமையாகக் கூறவேண்டுமானால், விசுவாசத்தோடும், குற்றவுணர்வு இல்லாமலும் தேவனிடம் கிட்டிச் சேருங்கள், அவ்வாறு நீங்கள் வரும்போது, தேவனும் உங்களோடு கிட்டிச் சேருவார். யாக் 4: 8 சொல்கிறது, “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.”

ஆதலால், இன்றே, இப்பொழுதே முழுமனதோடும் சிந்தையோடும், பெலனோடும் தேவனிடத்தில் சேருவோமாக.

கேள்வி: உங்கள் ஜெப நேரத்தில் உங்களுக்கு உதவி செய்வது எது? நீங்கள் எப்படி உங்கள் ஜெப மலையில் ஏறுகிறீர்கள்?