பேஸ்புக்கினால் வரும் பெரிய பிரச்சினை – தவிர்ப்பதற்கான பத்து வழிகள்!

Shyju Mathew

"Experience the Word of God, in the power of the Spirit."

November 22, 2013

[English Translation]

“பேஸ்புக் போன்ற சமூக கட்டமைப்பு வலைதளங்களில் மக்கள் எவ்வளவு அதிகமாக தங்கள் நேரத்தை செலவளிக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக மற்றவர்கள் தங்களை விட மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் வளர்கிறது” என்று ஹுய்-சு- சவ் மற்றும் நிக்கோலஸ் எட்ஜ் என்ற சமூக சிந்தனையாளர்கள் அமெரிக்காவில் உள்ள உட்டா வேலி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தாங்கள் மகிழ்ச்சியாக உள்ளது போன்ற புகைப்படங்களை அப்லோட் செய்வதின் மூலம் இவர்கள், மற்றவர்கள் தங்களை அவர்களைவிட குறைவு பட்டவர்களாக நினைக்கச் செய்கிறார்கள். facebook-heart-trouble

ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம் தலைவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு எனக்கு எழுதியிருந்தார். தன்னுடைய இருதயத்தில் என் மேல் பொறாமையை தன் தேக்கி வைத்திருந்ததாகவும், என்னுடைய பேஸ்புக் படங்களைப் பார்த்து என் ஊழியங்களைக் குறித்து அவர் இவ்வாறு நினைத்ததாகவும் கூறியிருந்தார்.

தன் இருதயத்தின் பிரச்சினைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் இந்த இளம் தலைவரின் தைரியத்தை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஒரு கொள்ளை நோயைப் போல் நம்மை சுற்றி இருக்கும் இந்த பிரச்சினையை வெல்ல அவர் முனைந்ததை கண்டு என்னைத் தாழ்த்தினேன்.

நாம் எல்லோரும் இப்படிப்பட்ட உணர்வுகளை பல முறை சந்திக்கலாம், ஆனால், சிலர் இதை உணர்ந்து கொள்ளாமல், காலப்போக்கில் இது கடுமையாக பாதிக்கும் அளவுக்கு விட்டு விடுகிறார்கள். இந்த உலகம் கையாளும் விதத்தில் நாம் பொறாமை உணர்வை கையாளாமல், வித்தியாசமான முறையில் இதை கையாள வேண்டும்.

பொறாமை நம்மை கீழ்க்கண்டவைகளை செய்ய வைக்கும்:

 • பிறரோடு ஒப்பிடுதல்
 • போட்டி மனப்பான்மை கொள்ளுதல்
 • வெறுப்பு
 • பகை
 • சண்டை
 • அவதூறு
 • பொய் சொல்லுதல்
 • பிறரைத் தவிர்த்தல்
 • சூழ்ச்சி
 • காயப்படுத்துதல்
 • பிறரை கீழ்த்தரமாக நடத்துதல்
 • பிறரை அவமதித்தல்
 • குறை கூறுதல்
 • பிறரை பாராட்டாமல் இருத்தல்

இந்தப் பட்டியலோடு நீங்கள் எதைக் கூறுவீர்கள்? இவைகளை சந்தித்திருக்கிறீர்களா? யோசியுங்கள்.

நாம் விசுவாசிகளாக அல்லது நல்லவர்களாக இருப்பதனால், யார் மேல் பொறாமை கொள்கிறோமோ, அவர்களை விட்டு தள்ளியிருக்க முற்படலாம். அல்லது, பேஸ்புக்கில் அவர்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கலாம் அல்லது தங்கள் பேஸ்புக் அக்கவுண்டையே நீக்கி விடலாம்.

இப்படி செய்வதின் மூலம் இந்த பிரச்சினையை தீர்த்து விட முடியுமா? இல்லை! இப்படி செய்வதின் மூலம் இந்த பிரச்சினையை மறைத்து வைக்கவே முடியும்.

இதை விடுத்து, இந்தப் பிரச்சினையை நேரடியாகக் கையாள முயற்சியுங்கள்:

 1. பொறாமை உங்கள் இருதயதில் நுழைய முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும், அந்த நபரை பாராட்டுங்கள். (பொறாமை காரணமாக உங்களால் இயற்கையாக அப்படி செய்ய முடியாது)
 2. இல்லை! அவர்களுடைய படத் தொகுப்பை மூடாதீர்கள். அதற்குப் பதிலாக, அவர்களை ஜெபத்தோடு வாழ்த்துங்கள், பின் அவர்களை வாழ்த்தி ஒரு கமெண்ட் பதிவு செய்யுங்கள்.
 3. அவர்களைப் பற்றி வீண் பேச்சு பேசுவதில் இருந்து விலகி இருங்கள். அந்த சகோதரனைக் குறித்தோ, சகோதரியைக் குறித்தோ உங்களிடம் யாராவது பேசினால், அதைக் கேட்பதைத் தவிருங்கள்.
 4. அவர்களிடத்தில் உள்ள நல்ல காரியங்களைக் குறித்து பேசுவதர்க்கான வாய்ப்புகளைத் தேடுங்கள்.
 5. அவர்களிடத்தில் எந்த நல்ல குணத்தையும் காண முடியவில்லையா? கர்த்தருடைய கிருபை நிறைந்த பார்வையில் பார்க்கும் படி அவர் உங்களுக்கு உதவி செய்ய ஜெபியுங்கள். பின் அவர்களுடைய நல்ல குணங்களைப் பார்த்து நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
 6. அவர்களிடத்தில் கெட்ட குணங்களையே பார்க்க முடிந்தால், அவர்களை நியாயந்தீர்க்காமல் இருக்க முயலுங்கள். (நீங்களும் பூரணமானவர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்)
 7. உங்கள் இருதயத்தை சோதித்து, பொறாமைக்கான காரணத்தை கண்டறியுங்கள். உங்கள் மகிழ்ச்சியின்மையை நீக்க முயலுங்கள். உங்கள் பிரச்சினையைக் குறித்து யாராவதோடு பேசுங்கள், அல்லது அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முற்ப்படுங்கள். ஆழமாக நிதானித்து பொறாமையின் உண்மையான காரணத்தை அறிந்துகொள்ளுங்கள். அதை கையாண்டு எதிர் காலத்தில் மற்றவரோடு இதே பிரச்சினை வராமல் இருக்கும்படியாக உங்கள் இருதயத்தை காத்துக்கொள்ளுங்கள்.
 8. அவர்கள் உங்களை காயப்படுத்தியிருந்தாலோ அல்லது அவர்கள் சம்பந்தப் பட்ட வேறு ஏதாவது காரியம் உங்களை பாதித்தாலோ, அவர்களுடைய சொந்த மின்னஞ்சலில் அவர்களுக்கு எழுதுங்கள். (அவர்களுடைய பேஸ்புக் பக்கத்தில் உள்ள பக்கப் பலகையில் இதைக்குறித்து எழுதாதீர்கள். அது தரமற்ற செயல்)
 9. உங்களுக்குள் இருக்கும் பொறாமையின் ஆவியை வெளியேற்றுங்கள். ஆம்! இயேசுவின் நாமத்தில் நீங்களே இதை செய்யுங்கள். ஒரு விசுவாசியின் ஆயுதங்களை தரித்துக்கொள்ளுங்கள்.
 10. தேவ வார்த்தைகளில் வளருங்கள். தேவ வார்த்தை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிடும்போது, பாவத்திற்கு இடம் இல்லாமல் போய்விடும்.

ஆம் நண்பர்களே! இது உங்களுக்கு உதவியாக இருக்கும். இப்படி செய்வது எனக்கும் பயன் கொடுத்திருக்கிறது. இயேசு கிறிஸ்து நம் நண்பர்களையும், எதிரிகளையும் நேசிக்கும்படி நமக்கு கூறியிருக்கிறார். இதில் நம் நண்பர்களும், குடும்பத்தினரும் அடக்கம்.

அதனால் நாம், தேவன் “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” என்று பிலி 2:3 இல் கூறியபடி அவர் பார்வையில் எல்லோரையும் பார்க்க முயலுவோமாக.

விவாதிப்பதற்கு: எதன் காரணமாக பொறாமை உண்டாகிறது என்று நினைக்கிறீர்கள்? அதை எப்படி கையாண்டிருக்கிறீர்கள்? எதை மேற்கொள்வது உங்களுக்கு மிகக் கடினமாக இருக்கிறது?